சென்னை,
சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பா.ஜ.க.வை சேர்ந்த கே.டி.ராகவனை கைது செய்யக்கோரியும், பாலியல் அத்துமீறல்களை தடுக்க தவறிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பதவி விலகக்கோரியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில அலுவலகம் வரையிலும் கண்டன பேரணி நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, வள்ளுவர் கோட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நேற்று வந்து குவியத்தொடங்கினர்.
தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் வக்கீல் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில், ஜோதிமணி எம்.பி., பொதுச்செயலாளர் காண்டீபன் உள்பட காங்கிரஸ் கட்சியினர் கொட்டும் மழையில் பா.ஜ.க. அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து, அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
தடையையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றனர். அப்போது, காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுதா ராமகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.