கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குடும்பத் தகராறில் இளம்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு - கணவன் கைது

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் கோகுல் (31 வயது). செல்போன் மெக்கானிக். இவருடைய மனைவி அஞ்சுமாஸ்டெலஸ் (28 வயது). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 7 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கோகுல் மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.

பெற்றோர் வீட்டிற்கு சென்ற அஞ்சுமாஸ்டெலசை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் மீண்டும் தகராறில் ஈடுபட்ட கோகுல் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தீக்காயத்துடன் கிடந்த அஞ்சுமாஸ்டெலசை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த அஞ்சுமாஸ்டெலசின் அண்ணன் சதீஷ் அருண் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மனைவியை தீ வைத்து கொளுத்திய கோகுல், அதற்கு உடந்தையாக செயல்பட்ட அஞ்சுமாஸ்டெலசின் மாமியார் விஜயா (55 வயது) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதில் கோகுலை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான விஜயாவை வலைவீசி தேடி வருகின்றனர்.