தமிழக செய்திகள்

துபாயில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் மடிக்கணினிகள், வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த தேவக்கோட்டையை சேர்ந்த பிரசாத் (வயது 26) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 14 பயன் படுத்தப்பட்ட பழைய மடிக்கணினி கள், விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 489 கிராம் தங்கத்தையும், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதே விமானத்தில் துபாயில் இருந்து வந்த இளையான்குடியை சேர்ந்த அப்துல் ரகுமான்(26) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 259 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 748 கிராம் தங்கம், ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினிகள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவற்றை யாருக்காக துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்கள் எனவும் பிடிபட்ட 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்