நாகர்கோவில்,
குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் (வயது 65). இவர் கடந்த 2006, 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர். தமிழ் மாநில காங்கிரசில் குமரி மேற்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
சமீப காலமாக ஜான் ஜேக்கப் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலையில் வீட்டில் இருந்த போது அவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் உடனடியாக அவரை சிகிச்சைக்காக நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மதியம் 1 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
எப்படி இறந்தார்?
இதுபற்றி ஜான் ஜேக்கப்பின் உறவினர்கள் கூறுகையில், உடல்நலக்குறைவால் அவருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து கருங்கல் போலீசார் கூறுகையில், முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தான் அவரது மரணத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் மரணம் தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா? அல்லது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.