தமிழக செய்திகள்

கோடரி, முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

சிவகங்கை அருகே புதிய கற்கால கற்கோடரி, முதுமக்கள் தாழி மற்றும் இரும்பு உருக்காலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சிவகங்கை, 

சிவகங்கை அருகே புதிய கற்கால கற்கோடரி, முதுமக்கள் தாழி மற்றும் இரும்பு உருக்காலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகாவிற்கு உட்பட்ட புதுப்பட்டிகண்மாய் பகுதியில் பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக் கண்ணன் மற்றும் காளத்தியேந்தலை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சமயக்குமார் ஆகியோர் களமேற்பரப்பாய்வு செய்த போது புதிய கற்காலத்தை சேர்ந்த கற்கோடாரி கிடைத்து உள்ளது.

இது பற்றி இவர்கள் கூறியதாவது:- கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடாரியின் நீளம் 5 செ.மீ, அகலம் 4 செ.மீ. இந்த கருவியை கற்கோடாரி அல்லது செதுக்கு பொருளாகவும் பயன்படுத்தி இருக்கலாம். இந்த பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக இரட்டை அடுக்கில் பல முதுமக்கள் தாழிகளும் கிடைத்து உள்ளது. மேலும் இரும்பு உருக்காலை இருந்ததற்கான எச்சங்களும் அதிக அளவில் காணப் படுகின்றன. புதிய கற்காலம் சுமார் கி.மு. 3000 முதல் கி.மு. 1000 வரை என குறிப்பிடுகின்றனர்.

சிறப்பு

அக்கால மக்கள் வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கற்கருவிகளை பளபளப்பாக்குதல், மண்பாண்டம் செய்தல் போன்றவை புதிய கற்கால பண்பாட்டின் சிறப்பு கூறு களாகும். தாவரங்களை பயிரிட தொடங்கியதாலும், பிராணிகளை வளர்த்ததாலும், ஒரே இடத்தில் நிலையாக வாழ முற்பட்ட புதிய கற்கால மக்கள், கிராம சமுதாயங்கள் உருவாகவும் வழி வகுத்தனர். கருவிகளை உருவாக்குவதிலும், மனிதனுக்கு தேவையான சாதனங்களை படைப்பதிலும் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களை இந்த காலத்தில் தெளிவாக காணமுடிகிறது. இந்த கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டு உள்ளது. சமைப்பதற்கும், உணவு தானியங்களை சேமித்து வைக்கவும் மண்பாண்டங்கள் பயன்பட்டன. புதிய கற்காலத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் இருந்தது.

பழங்கால வரலாறு

அவ்வாறு புதைக்கும்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து புதைத்தனர். இறந்தோரை அடக்கம் செய்வதற்கு பெரிய மண்பாண்ட தாழிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த பகுதியில் கற்கோடரி, முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்துள்ளது. இந்த பகுதியில் தொல்லியல் எச்சங்கள் அதிக அளவில் கிடைப்பதால் அரசு முறையான அகழாய்வு செய்தால் இந்த பகுதியின் பழங்கால வரலாறு தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்