உயிரை பணயம் வைத்து படகில் ஆற்றை கடந்து செல்லும் கொடியம்பாளையம் தீவு கிராம மக்களுக்கு விடிவு கிடைக்க புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடியம்பாளையம் தீவு கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆறு வங்க கடலில் கலக்கும் இடத்தில் ஒரு பக்கம் கொள்ளிடம் ஆறு, மறுபக்கம் வங்கக்கடல் நடுவே இந்த கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளனர். இங்கு 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கேயே வசித்து வருகின்றனர். இவர்கள் வீடுகள் கட்டுவதற்கு அருகில் உள்ள கோட்டைமேடு கிராமத்தில் உள்ள பழமையான கோட்டை சுவரை உடைத்து அதிலிருந்து கல் எடுக்கப்பட்டு அந்த பகுதிகளில் ஓட்டு வீடுகள் கட்டியுள்ளனர். இப்பகுதி மக்கள் போக்குவரத்து இன்றி மிகவும் சிரமப்பட்டு படகின் மூலம் சென்று வந்தனர்.
சுனாமியில் பேரழிவ சந்தித்த தீவு கிராமம்
பேரிடர் காலங்களில் இப்பகுதி மக்கள் கடல் அல்லது கொள்ளிடம் ஆற்றில் படகு மூலம் சென்று தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டு வந்தது. இவர்கள் சென்று வருவதற்கு அருகில் உள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர சிகிச்சை என்றால் கூட சிதம்பரம் சென்று தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த சுனாமியின் போது கொடியம்பாளையம் தீவு கிராமம் அதிக அளவில் பேரழிவை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தொண்டு நிறுவனம் சார்பிலும், அரசு சார்பிலும் அப்பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டது. இந்த பகுதி மக்கள் உயிரை பணயம் வைத்து படகில் ஆற்றை கடந்து வருகின்றனர். எனவே 60 ஆண்டு கால கோரிக்கையான புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த காமராஜ் கூறுகையில்,
கொடியம்பாளையம் தீவு கிராமம் மயிலாடுதுறை மாவட்டத்தின் சனிமூலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளோம். கடந்த சுனாமியின் போது பேரழிவை சந்தித்து தங்களது உடைமைகளை இழந்த நிலையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், அரசின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை செய்தனர். எங்கள் கிராமத்திற்கு 2006-ம் ஆண்டு புதிய பாலம் அமைக்கப்பட்டது. அதனால் நாங்கள் சிதம்பரம் செல்லும் சூழல் ஏற்பட்டது. சிதம்பரத்திலிருந்து அடிக்கடி மினி பஸ்கள் சென்று வருகிறது. ஆனால் எங்கள் கிராமத்திற்கு அரசு பஸ் அதிகமாக இயங்குவதில்லை. எனவே மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படகு மூலம் ஆற்றை கடக்கும் நிலை
நாங்கள் பழையார், திருமுல்லைவாசல் பகுதியில் உள்ள எங்கள் உறவினர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றாலும், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும் படகு மூலம் நான்கு கிலோமீட்டர் தூரம் ஆற்றில் கடந்து பழையார் சென்று அதன் வழியாக தான் செல்லும் சூழல் ஏற்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் சிதம்பரம் சென்று அங்கிருந்து மயிலாடுதுறை பஸ்சில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இந்த கொடியம்பாளையம் தீவிற்கு வந்து செல்கின்றனர் என்றார்.
சுற்றுலா மையமாக அமைக்க வேண்டும்
கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், கொடியம்பாளையம் தீவு கிராமம் கொள்ளிட ஆறு, கடல் பகுதி ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. நாங்கள் நினைத்த நேரத்திற்கு வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பிச்சாவரத்தில் இருந்து கொடியபாளையம் கிராமத்திற்கு சாலை வசதி சரியில்லாத நிலையில் உள்ளது.
எனவே சாலையை அகலப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கொடியம்பாளையம் தீவு கிராமத்திற்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா மையமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடியம்பாளையம் -பழையார் கிராமத்தை இணைக்கும் வகையில் புதிய பாலம் அமைத்தால் கிராம மக்கள் சிரமமின்றி சென்று வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.