தமிழக செய்திகள்

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் குழந்தை திருமணம் அதிகரிப்பு

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக, சமூக நல அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்தரங்கம்

தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, யுனிசெப் நிறுவனம் மற்றும் தோழமை அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் எல்.அலெக்ஸ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் எஸ்.ரதிதேவி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, 18 வயதுக்கு குறைவான பெண்கள், 21 வயதுக்கு குறைவான ஆண்களுக்கு நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணங்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் என குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களில் பஞ்சாயத்து தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். குழந்தை திருமணங்களை தடுக்கும் பணி அனைவரின் கூட்டு முயற்சியாகும்.

குழந்தை திருமணம்

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் இல்லை என கூறிவிட முடியாது. ஆனால் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் மிக குறைவாகவே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 19 குழந்தை திருமண நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 2 சம்பவங்களே பதிவாகி உள்ளன. பெரும்பாலான குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் தான் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதாக கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குழந்தை திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை திருமணங்களை தடுப்பதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிக முக்கியமானது. அனைவரும் ஒருங்கிணைந்து குழந்தை திருமணங்களை முழுமையாக தடுக்க முயற்சி செய்வோம் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கருத்தரங்கில் தோழமை அமைப்பின் இயக்குநர் ஏ.தேவநேயன், மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் ஏ.ஜான் சுரேஷ், மூத்த ஊடகவியலாளர் ராமசுப்பிரமணி, யுனிசெப் திட்ட மேலாளர் ஜி.ஐஸ்வர்யா, தோழமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை