சென்னை,
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோர கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது விடியா தி.மு.க. அரசு. அரசியல் பழிவாங்கல் உன் பெயர் தி.மு.க.வா?. ஏற்கனவே 5 முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் சட்ட மீறல் நடத்திய தி.மு.க., வெறுங்கையோடு திரும்பிய நிகழ்வை மறந்து, மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி ஆகியோரது இல்லங்கள் மற்றும் அவர்களுடைய உறவினர் கள், நண்பர்கள், நிர்வாகிகள் ஆகியோரது இல்லங்களிலும் சோதனை என்ற சட்ட ஈரலை நடத்திக் கொண்டிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டபோது, சந்திக்க மறுத்த கலெக்டரை கண்டிக்கும் விதமாக கலெக்டர் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பிரச்சினையை எதிர்கொண்ட காரணத்துக்காகவும், தர்மபுரி மாவட்ட சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கிடைக்கவிடாமல் செய்த, சமரசம் இல்லா சமரன் கே.பி.அன்பழகனை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கைதான் தற்போது நடைபெற்று கொண்டிருக்கக்கூடிய இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஆகும்.
வலுவும், உரமும் ஊட்டும்
எம்.ஜி.ஆரின் வழி வந்து அவரின் பாசறையில் பயின்றவர்கள் நாங்கள். அஞ்சி பிழைக்கவும், அண்டி பிழைக்கவும், சுரண்டி பிழைக்கவும் எந்தவித தேவையும் எங்களுக்கு இல்லை. காரணம் இது பல சோதனைகளையும், பல இயக்க பிளவுகளையும் கண்டு வென்ற மிகப்பெரிய ஆலமரம். இதை தி.மு.க. ஒரு போதும் சாய்த்துவிட முடியாது. நீங்கள் நடத்தக்கூடிய ஒவ்வொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் நாடகமும் எங்களுக்கும், எங்கள் இயக்க தலைவர்களுக்கும், இந்த இயக்கத்தை தாங்கி பிடித்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் மேலும் வலுவும், உரமும் ஊட்டும் என்பதில் எந்தவித அய்யமும் இல்லை. எம்.ஜி.ஆரின் பாசறையிலும், ஜெயலலிதாவின் பள்ளியிலும் ஒழுக்கமான கல்வியை பயின்றவர்கள் நாங்கள். தேசத்தின் நலனும், தமிழகத்தின் வளர்ச்சியும் மட்டுமே எங்களுக்கு பிரதானம் என்று எண்ணி எங்களுடைய அரசியல் பயணத்தை தொடர்வோம்.
கண்டனம்
ஆட்சிக்கட்டிலில் ஏறி குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஊர்தியை பங்கு பெற வைக்க முடியாத தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய நிர்வாகத்திறமை இன்மையை மறைக்கவே தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தாமல் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதற்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.