தமிழக செய்திகள்

அரசு பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியவருக்கு பாராட்டு

ஜோலார்பேட்டை அருகே அரசு பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், பெரியமோட்டூர் ஊராட்சி, பூனைக்குட்டிபள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. மேலும் இந்தப் பள்ளியை தர முயற்சி பள்ளி கட்டிடம் அமைக்க போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் பள்ளியானது உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் பெங்களூர் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் பள்ளியின் அருகே ஒரு ஏக்கர் சொந்த நிலத்தை உயர்நிலைப் பள்ளி கட்டிடம் அமைக்க இலவசமாக கொடுப்பதற்கு முன் வந்தார். இதனை அடுத்து பள்ளியின் 25 ஆம் ஆண்டு விழா மற்றும் பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். அமுதா தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. சுப்பிரமணி வரவேற்றார். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். மேலும் பள்ளியின் ஆண்டு விழா தொடக்கத்தில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பள்ளியின் ஆண்டு அறிக்கையை பள்ளியின் ஆசிரியர்கள் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் அமைக்க ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு இலவசமாக கொடுத்த வடிவேல் என்பவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்தனர். மேலும் உயர்நிலைப்பள்ளி அமைப்பதற்கான ஒரு ஏக்கர் நிலத்தின் ஆவண பத்திரத்தை துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து நடுநிலையாக உள்ள இந்த பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மேற்கொண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதியில் பள்ளியின் ஆசிரியை ஜி. ஜெயலக்ஷ்மி நன்றி கூறினார்.