பெட்டிக்கடையில் பெண் ஒருவர் மது விற்பனை செய்தது தொடர்பான வீடியே சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
பெட்டிக்கடையில் மது விற்பனை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மழவராயநல்லூர் ஊராட்சி தட்டாங்கோவில் கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்று உள்ளது. இங்கு 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாகவும், டாஸ்மாக்கில் ரூ.135-க்கு விற்கப்படும் குவாட்டர் பாட்டில் ரூ.200-க்கும், கட்டிங் ரூ.100-க்கும் விற்கப்படுவதாகவும், இதனால் அந்த பகுதி கிராம இளைஞர்கள் மதுபோதைக்கு அடிமையாகி வருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த பெட்டிக்கடையில் சிலர் அதிகாலையிலேயே மது வாங்கி குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடந்தனர். இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.
கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
பெட்டிக்கடையில் நடக்கும் மது விற்பனை காரணமாக திருராமேஸ்வரம், கோட்டகச்சேரி, கூப்பாச்சிக்கோட்டை, வாக்கோட்டை, தென்கோவனூர், வடகோவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த கருத்தை தென்கோவனூர், திருராமேஸ்வரம் ஆகிய 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் தீர்மானமாக நிறைவேற்றி கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கடந்த 1-ந் தேதி அனுப்பி வைத்தனர்.
சமூக வலைதளங்களில் பரவியது
ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து வாலிபர் ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
பெண் கைது
இதன் எதிரொலியாக கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் மது விற்பனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெட்டிக்கடையை நடத்தி வந்த தட்டாங்கோவிலை சேர்ந்த லாரன்ஸ் மனைவி நட்சத்திரமேரி(வயது 48) என்பவரை கைது செய்தனர்.