சென்னை,
புத்தாண்டையொட்டி, தமிழக போலீசாருக்கு, போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு பல்வேறு சவால்கள் தோன்றின. காவல்துறையினர் அவற்றை வழக்கமான தைரியமுடனும், தீர்க்கமான முடிவுடனும் எதிர்கொண்டனர். ஜல்லிக்கட்டு, தேவர் குருபூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவுநாள், மதுரை சித்திரை திருவிழா மற்றும் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் போன்ற பெரிய நிகழ்வுகள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்தன.
சட்டம்-ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டது. குற்ற புலன் விசாரணை திறமையாக மேற்கொள்ளப்பட்டன. அமலாக்கப்பணி மிகவும் மேம்படுத்தப்பட்டது. காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டதின் காரணமாகவே இந்த இலக்குகளை அடைய முடிந்தது.
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
தென் தமிழகத்தில் சாதிய படுகொலைகள், வடதமிழகத்தில் ரவுடிகள் பழிக்குப்பழி கொலைகள் தலைதூக்கியபோது தமிழக காவல்துறை, அந்த மோதல் சூழ்நிலையை மிகச்சிறப்பாக எதிர்கொண்டது. ஆபரேஷன் ரவுடி வேட்டை மூலம் 3,325 குற்றவாளிகள் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். 1,117 பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. போதை மருந்துகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் 23 டன் கஞ்சா மற்றும் 20 கிலோ ஹெராயின் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொரோனா 2-ம் அலைக்கு எதிரான போரில் பங்கேற்றதில், தமிழக காவல்துறையை சேர்ந்த 139 காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையாணையில் திருத்தம் செய்து, காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கியது, காவலர் குடியிருப்பின் அளவை 750 சதுர அடியாக உயர்த்தியது, சிறு தண்டனைகளின் மேல் நடவடிக்கை கைவிட்டது போன்ற சரித்திர ஆணைகளை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
காவலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான 1,500 அரசு வேலையும், தனியார் நிறுவனங்களில் 1,067 பேருக்கு வேலையும் பெற்றுத்தந்துள்ளோம்.
உயர் அதிகாரியின் கடமை
தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் 989 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ள 10 ஆயிரம் போலீசார் ஆகியோர் மூலம் தமிழக காவல்படை இளமையாகவும், உற்சாகத்துடனும் விளங்கும். தொழில்நுட்ப நுண்ணறிவு கொண்ட இந்த இளம் அதிகாரிகள் பொதுமக்களிடம் இன்னும் கனிவுடனும், கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்வார்கள்.
நமது குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இதுவாகும். சில காவல் அதிகாரிகள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் திருப்திகரமானதாக இல்லை. காவல் பாதுகாப்பில் வன்முறை கவலையளிப்பதாக உள்ளது. எல்லா குற்றங்களும் பதிவு செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் இன்னும் உள்ளன.
நேர்மை, தைரியம், நேர்த்தி மற்றும் பணி சார்ந்த நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்மாதிரியாக இருந்து காவலர்களை வழிநடத்துவது, ஒவ்வொரு உயர் அதிகாரியின் கடமையாகும். எனவே இந்த கண்ணியமிக்க படையின் உறுப்பினருக்கு பொருந்தாத எந்த செயலையும், எந்த அதிகாரியும், எந்த தருணத்திலும் செய்யக்கூடாது.
சந்திக்கவுள்ள சவால்கள்
கல்விக்கூடங்கள் அருகில் போதை மருந்துகள் விற்பனை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சாலை விபத்துகள், கணினி வழி குற்றங்கள் ஆகியவை வரும் ஆண்டில் நாம் சந்திக்கவுள்ள சவால்களாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குற்றங்கள், குற்றவாளிகள் மற்றும் எதிர்மறையான திட்டமிட்ட விஷம பிரசாரங்கள் ஆகியவற்றுக்கு எதிரான போரில் நமது முழுத்திறமை மற்றும் அறிவுடன் போராடுவோம். அப்போது, நாம் நமது இதயத்தில் எந்தவித தீய எண்ணமும் இன்றி, விருப்பு வெறுப்புமின்றி நடந்து கொள்வோம் எனவும் நான் நம்புகிறேன். எங்கும், எப்போதும் ஒழுங்கையும், அமைதியையும், நிலைநாட்ட நாம் கடமைபட்டுள்ளோம்.
நிகழ்காலத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும், எதிர்காலத்தில் பெருத்த நம்பிக்கையுடனும் புத்தாண்டில் காலெடுத்து வைக்கும் மதிப்புமிக்க தமிழக காவல்துறையை வழிநடத்தி செல்வது மிகப்பெரிய பொறுப்பாகும். அந்த கடமையை சரிவர செய்து முடிக்க எனக்கு துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.