சென்னை,
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது இலங்கைக்கு காங்கிரஸ் கூட்டணி உதவியதாகவும், அதற்கு தி.மு.க. துணை போனதாகவும் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது தலைவர் கருணாநிதி எப்படி வேதனைப்பட்டார் என்பதை அவருடன் இருந்தவர்களுக்கும், அவரை நன்கு அறிந்தவர்களுக்கும் தெரியும்.
ஈழம் என்ற சொல்லோ, அதன் வரலாறோ 2009-ம் ஆண்டில் இருந்து தொடங்கியதில்லை. நீங்கள் (தமிழிசை) பிறப்பதற்கு முன்பே தலைவர் கருணாநிதி ஈழமக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். தி.மு.க. தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில், அறிஞர் அண்ணா பொதுச்செயலாளராக தலைமை தாங்கி சிதம்பரத்தில் நடந்த பொதுக்குழுவில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண, நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி.
தேவைப்பட்டால், தங்களின் தகப்பனார் குமரிஅனந்தனை தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். தமிழக வரலாற்றையும், கருணாநிதி இலங்கை தமிழர்கள் மீது கொண்டிருந்த அக்கறையையும் அவர் நன்கு அறிவார்.
கரைபடிந்த ராஜபக்சேவின் கரங்களை அங்கு சென்று முகர்ந்தாரே பிரதமர் நரேந்திரமோடி?. அதே ராஜபக்சேவையும், அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே?. அதைப்பற்றி ஈழத் தமிழர் நலன் மீது அக்கறை கொண்ட தமிழிசை வாய் திறந்ததுண்டா?.
வழிநெடுகிலும் வரலாறுகள் குவிந்துள்ளன. முள்ளிவாய்க்கால் தடயங்களைப் போலவே எங்களின் மனதில் ஆறாத கவலைகள் உண்டென்றால் அது ஈழத்தமிழர்கள் குறித்த கவலை தான். இனியாவது தமிழிசை வரலாறு அறிந்து பேச வேண்டும். வரலாறு தெரியாமல் புதிய வரலாற்றை தி.மு.க.வின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அளிக்க உள்ளது அ.தி.மு.க. அரசு. அதாவது எதிர்க்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது வேடிக்கையானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.