சென்னை,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம், புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்த ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ச.கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை செயலாளரும், உறுப்பினர் செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிகளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைசேர்க்கும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்க வேண்டும் என்றும், அதற்கேற்றாற்போல் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.