தமிழக செய்திகள்

சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருது மராட்டிய கவர்னர் தலைமையிலான விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது

2020-ம் ஆண்டில் சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருது மராட்டிய மாநில கவர்னர் தலைமையிலான விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

கோவா மாநிலம் தாஜ் ரெசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற விழாவில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்டராக்டிவ் போரம் ஆப் இந்தியன் எகானமி என்ற அமைப்பு சார்பாக 2020-ம் ஆண்டில் சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருது வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு மராட்டிய மாநில கவர்னர் பகத் சிங் கோஷியாரி தலைமை தாங்கினார்.

இந்த விருதை 2018-ம் ஆண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், 2019-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வழங்கினார்கள். இவ்விருதை, மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பைரன் சிங், ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கடந்த காலங்களில் பெற்றுள்ளனர். சமூக நலனுக்கான இந்த விருதை ஏற்றுக் கொண்டு மு.க.ஸ்டாலின் உரையாற்றிய வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.

தி.மு.க. அரசு சாதித்து காட்டியிருக்கிறது அதில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

2020-ம் ஆண்டில் சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருதுக்கு என்னை தேர்வு செய்துள்ள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கியான் சுதா மிஸ்ராவுக்கும் - இந்த அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்வில் இருப்போருக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது மிக முக்கியக் கடமை. தி.மு.க. அரசு அமைந்த போதெல்லாம், பல்வேறு சமூகநல - சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டில் சாதித்துக் காட்டியிருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் சமூகநீதிக்கான திட்டங்களை - சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள சமூக நலத்திட்டங்களும் - சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் இன்றைக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்பதை இந்த விருது பெறும் நேரத்தில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது கூட- கொரோனா பேரிடரில் மருந்து, உணவு, அத்தியாவசியத் தேவைகள் போன்றவை ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக - ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை ஒரு இயக்கமாக நடத்தி மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கிய இயக்கம் தி.மு.க..

அதன் தலைவராகப் பொதுவாழ்வில் இருக்கும் என் போன்றோரின் பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த விருதிற்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள சமூக, பொருளாதார பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் என்றைக்கும் இந்தியாவின் முன்கள வீரனாகத் தமிழகம் இருக்கும் என்று உறுதியளித்து - என்னை இந்த விருதிற்குத் தேர்வு செய்த இந்த அமைப்புக்கும் நீதிபதிகளுக்கும் மீண்டும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்