சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் வி.அன்பழகன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
சிறு குழந்தையாக இருக்கும்போது களிமண்ணால் பிள்ளையார் சிலை செய்து, கொழுக்கட்டை, மோதகம், பொரி, கடலை, பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து பக்தியுடன் விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இந்து மத அமைப்புகள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை வைத்து வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் செல்லும் புதிய பழக்கம் உருவாகியுள்ளது.
தமிழக அரசும், போலீசாரும் இதை தடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் விநாயகர் ஊர்வலம் சென்றபோது, மத மோதல் ஏற்பட்டு, சட்டம்- ஒழுங்கு பிரச்சினையினால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் மூச்சு திணறி இறந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள், பொதுமக்கள் அதிகம் கூட கூடாது. மத விழாக்கள் நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
இந்த உத்தரவுகளை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்கள் ஜூம்மா தொழுகையையும், கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனையையும், இந்துக்கள் மதுரை சித்திரை திருவிழா, ஆடி மாத கோவில் திருவிழாக்களை மேற்கொள்ளவில்லை. அரசின் உத்தரவுகளை இவர்கள் மதித்து செயல்பட்டனர். இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த தடை உத்தரவை மீறுவோம் என்று அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் சிலைகளை வைப்போம். அதுவும் சென்னையில் சுமார் 7,500 சிலைகளை வைத்து ஊர்வலம் எடுத்துச் செல்வோம் என்றும் அறிவித்துள்ளனர்.
சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே இதற்கு தடை விதிக்கவேண்டும். தமிழகம் முழுவதும் சிலைகள் வைக்கவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ அனுமதிக்க கூடாது என்று உள்ளூர் போலீசாருக்கு உத்தரவிட்டு சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டவும், விநாயகர் சதுர்த்தியால் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.குமாரதேவன் ஆஜராகி, அரசு தடை உத்தரவுக்கு சவால் விடும் விதமாக எதிர்மனுதாரர்கள் செயல்படுகின்றனர். தடைகளை மீறி சிலைகளை வைப்போம் என்று அரசை மிரட்டுகின்றனர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இதுபோன்ற மிரட்டலில் இருந்து அரசை காப்பாற்றுவது இந்த ஐகோர்ட்டின் வேலை இல்லை. சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிகளை பராமரிப்பது எல்லாம் அரசின் பணி. அதில் ஐகோர்ட்டு தலையிடாது. தடையை மீறினால், தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.