சென்னை,
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று பார்வையிட்டார். கொரோனா தடுப்பு நடவடிகைகள் அனைத்தும் தீவிரமாக பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள், பேரவை செயலக ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கூட்டத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது;-
16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை முதல் துவங்குகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து, அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் சமவாய்ப்பளித்து, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழச்செய்யவும், பேரவையின் மாண்பை நிலைபெறச் செய்யவும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.