தமிழக செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை; சாலையோரம் ஓய்வெடுத்த கரடி - ஊட்டி அருகே பரபரப்பு

ஊட்டி-குன்னூர் சாலையில் வேலி வியூ பகுதியில் சாலையோரம் கரடி ஒன்று அமர்ந்து ஓய்வெடுத்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சமீப நாட்களாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு வரும் வனவிலங்குகளால் மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுவதுடன், வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளை வனவிலங்குகள் வேட்டையாடி செல்கின்றன.

இந்த நிலையில் ஊட்டி அடுத்த தூபகண்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் சிறுத்தை உலா வருகிறது. ஏற்கனவே சிறுத்தை நடமாட்டத்தால் வீடுகளை விட்டு வெளியே வர மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிராம பகுதிக்குள் சிறுத்தை நுழைந்து உணவு தேடி நோட்டமிட்டவாறு ஒரு வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது.

சிறிது நேரம் தயங்கி நின்ற சிறுத்தை, மீண்டும் வந்த வழியாக சென்றது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியான நிலையில், தூபகண்டி கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சிறுத்தை கடந்த சில நாட்களாக வீட்டில் வளர்க்கும் நாய்களை கவ்வி செல்கிறது. ஒருவேளை நாய்கள் கிடைக்காத சமயத்தில், மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Also read:5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இதேபோல் ஊட்டி-குன்னூர் சாலையில் வேலி வியூ பகுதியில் சாலையோரம் கரடி ஒன்று அமர்ந்து ஓய்வெடுத்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். இதன் பின்னர் கரடி வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.