ஆலந்தூர்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பி வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், பிரதமர் மோடி ரஜினி, கமல் யார் வந்தாலும் கூட்டணியில் சேர்ந்துக்கொள்வோம் என்று கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கமல்ஹாசன், கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்பது அவரது நிலைப்பாடு. வருவோமா? என்பது எங்கள் நிலைப்பாடு. அதுப்பற்றி தனியாக நாங்கள் கூட்டம் நடத்தி சொல்கிறோம் என்று தெரிவித்தார்.
அவரிடம், மேகதாது அணை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் போராடிய அ.தி.மு.க. எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர், நல்லது என்றார். மேலும் அவர் கூறியதாவது:-
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது குறித்து இன்று(சனிக்கிழமை) நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். கண்டிப்பாக எங்களின் ஆதரவு விவசாயிகளுக்கு உண்டு.
சபரிமலையில் 2 பெண்கள் கோவிலுக்குள் சென்றதால் கேரளாவில் கலவரம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் கேரளாவில் வலதுசாரிகள்தான் கலவரத்தை உண்டாக்குகிறார்கள்.
கஜா புயலுக்கு வராத மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வருகிறார். வருவது நல்லது என்ற வகையில் எய்ம்ஸ் நல்லது. ஆனால் கஜா புயல் பாதிக்கப்பட்டபோது வரவில்லை என்பது குறைதான். அந்த குறை அப்படியே இருக்கிறது.
எந்த கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி நான் சொல்கிறேன். இப்போது அவசரப்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.