சென்னை,
நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் களத்தில் குதித்து உள்ளனர்.
கமல்ஹாசன் கடந்த 21-ந்தேதி மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவித்தார். அரசியல் பணிகளில் தீவிரமாகி இருக்கும் அவர், தனது அடுத்த பொதுக்கூட்டத்தை திருச்சியில் நடத்த இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தும் தனிக் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார். முதற்கட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மன்ற நிர்வாகிகள் மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்ட வாரியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிர்வாகி வி.எம்.சுதாகர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதன்படி நெல்லை மாவட்ட ஒன்றிய, நகரத்தை சேர்ந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதுவரை மன்ற நிர்வாகிகளுக்கு வீடியோ மூலம் ஆலோசனைகள் வழங்கி வந்த ரஜினிகாந்த், நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
எல்லா மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்த பிறகு, மொத்தமாக உங்களை எல்லாம் சந்திக்க திட்டமிட்டேன். ஆனால் அதற்கு நாள் அதிகம் ஆகும். அதுவும் இல்லாமல், நிறைய பேர் ஆகிவிட்டால், ஒவ்வொருவரையும் அடையாளம் காண்பது கஷ்டமாகிவிடும்.
அதனால் இப்போது உங்களை சந்திக்க வந்து இருக்கிறேன்.
காலா படம் உங்கள் ஊர் (நெல்லை) கதைதான். மும்பை தாராவி முழுவதும் உங்கள் ஆட்கள் தான் இருக்கிறார்கள்.
அரசியல் பாடத்தை மற்றவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும். அரசியலுக்கு கட்டமைப்பு மிக மிக முக்கியம். தமிழ்நாடு மட்டும் அல்ல மற்ற மாநிலங்களில் பெரிய கட்சிகள் சில தேர்தல்களில் தோற்றாலும் கூட நீடித்து நிலைக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களுக்கு என்று ஓட்டு வங்கி வைத்து இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் அமைத்து வைத்து இருக்கிற கட்டமைப்புதான். அதைத்தான் நாம் முதலில் தொடங்க வேண்டும்.
இது சாதாரண கட்டிடம் இல்லை. 32 தளம் கொண்ட கட்டிடம் (தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள்). எனவே அதற்கு அடித்தளம் ரொம்ப, ரொம்ப வலிமையாக போட வேண்டும். அதற்குத்தான் முதலில் நாம் அந்த பணியில் ஈடுபட்டு இருக்கிறோம்.
ஒரு குடும்பம் முழுவதும் ஒற்றுமையாக இருந்தால் தான் அந்த குடும்பம் நன்றாக இருக்கும். அதற்கு முதலில் குடும்ப தலைவன் சரியாக இருக்க வேண்டும். நான் சரியாக இருக்கிறேன். நீங்களும் சரியாக இருப்பீர்கள் என்று எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது.
முதலில் நாம் சத்தம் இல்லாமல் இந்த வேலையை (அரசியல் கட்டமைப்பு) முடிக்க வேண்டும். நாம் சத்தம் இல்லாமல், அமைதியாக இருப்பதாக வெளியே சொல்கிறார்கள். அது அப்படியே இருக்கட்டும். மற்றவர்கள் சத்தம் போடட்டும். நாம் சத்தம் போடும் போது பார்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறீர்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. உங்களுக்கு கட்டுப்பாடு முக்கியம் என்று நான் மறுபடியும் சொல்லிக் கொள்கிறேன். இதுவரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்ல முறையில், நான் என்ன நினைத்தேனோ, அதை விட ரொம்ப அழகாக நடந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
குறிப்பாக மகளிர், தாய்க் குலம் காட்டுகிற அன்பு, ஆதரவை பார்க்கிற போது, எனக்கு நம்பிக்கை இன்னும் அதிகமாகி இருக்கிறது. நிச்சயமாக ஆண்டவன் மூலமாகவும், உங்கள் மூலமாகவும் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து இருக்கிறது. அது நிச்சயமாக நிறைவேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு நிர்வாகியின் பெயரையும் ரஜினிகாந்த் கேட்டு தெரிந்து கொண்டார்.
அப்போது புனை பெயர் உள்ள நிர்வாகிகள், அவருடைய ஸ்டைலில் எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது (பாட்ஷா படத்தில் வருவது போன்று) என்று, அந்த பெயரையும் தெரிவித்தனர். அதைக்கேட்டு ரஜினிகாந்த் சிரித்தார். அப்போது கூட்டத்தினர் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
கூட்டம் முடிந்த பிறகு ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, எல்லா மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி முடிந்த பிறகு, சரியாக முடிவு எடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது குறித்து அறிவிக்க இருப்பதாக கூறினார்.