தமிழக செய்திகள்

மக்கள் விரோத திமுகவின் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுதிடுவோம்.. - டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் டிடிவி தினகரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு ஏற்ப மக்களுக்கு நோயற்ற வாழ்வு, மிகுதியான விளைச்சல், பொருளாதார வளம், மகிழ்ச்சியான வாழ்வுநிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்து கடமைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும், இந்தியாவிலேயே தமிழகம் தான் தலைசிறந்த மாநிலமாகத் திகழ வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்திய இதயதெய்வம் அம்மாவின் 78-வது பிறந்தநாளையொட்டி எனது அன்பிற்குரிய கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களுக்கும், உங்களில் ஒருவனாக நான் எழுதும் மடல்.

தன்னலம் கருதாது பொதுநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தலைவராக, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மற்றவர்களுக்கு முன்னோடியாக, மகளிரின் வாழ்வில் ஒளியேற்றிய பெண் இனத்தின் பெருமையாக, தோல்வியைக் கண்டு துவளாமல் மீண்டு(ம்) எழும் பீனிக்ஸ் பறவையாக, அரசியல் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக என எத்தனையோ பரிணாமங்களைக் கொண்டிருந்தாலும், தமிழக மக்கள் அனைவராலும் “அம்மா” என்று அன்போடு அழைக்கப்படுவதையே தன் வாழ்நாள் பாக்கியமாக கருதியவர் இதயதெய்வம் அம்மா.

அண்ணா, எம்.ஜி.ஆரின் பாதையில் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா அரிசித் திட்டத்தில் தொடங்கி, பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் தொட்டில் குழந்தை திட்டம், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் தொகையுடன் கூடிய தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், கிராமப்புற மகளிரைத் தொழில் முனைவோராக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், விளிம்புநிலை மக்களின் பசியைப் போக்கும் அட்சயப்பாத்திரமான அம்மா உணவகங்கள் என இதயதெய்வம் அம்மாவால் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் வளத்தையும், வசந்தத்தையும் பெற்றுத் தந்தன.

தனது இடைவிடாத முயற்சியால் 69 சதவிகித இடஒதுகீட்டை பெற்றுத் தந்த சமூகநீதி காத்த வீராங்கனையாக, தொடர் சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ததோடு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பையும் பெற்று தமிழக விவசாயிகளால் காவிரித் தாயாகவும், பொன்னியின் போற்றப்படுபவர் இதயதெய்வம் அம்மா. செல்வியாகவும் ஓர் அரசின் தலைமைப் பிரதிநிதியாக, தனிப்பெரும்பான்மையுடன் பலமுறை ஆட்சியமைத்த தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக தன் கடமைகளைச் சரிவரச் செய்ததோடு, மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்த இதயதெய்வம் அம்மா, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எண்ணத்திலும் இன்றளவும் வானளவு உயர்ந்து நிற்கிறார்கள்.

கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், கட்டப்பஞ்சாயத்து, கள்ளத்துப்பாக்கி கலாச்சாரம் போன்றவை தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், மறுபுறம் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சாதாரண பொதுமக்கள் தொடங்கி விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள், தூய்மைப்பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், நெசவாளர்கள், மின்வாரியம் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டக் களத்தில் குதித்திருப்பதன் மூலம் தமிழ்நாடு இதுவரை கண்டிராத மோசமான நிலைக்கு திமுக அரசால் தள்ளப்பட்டுள்ளது.

அதிலும், விலைவாசி உயர்வு, வரிகளும் கட்டணங்களும் பன்மடங்கு அதிகரிப்பு, மூடப்படும் தொழிற்சாலைகள், அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை என நாளுக்கு நாள் தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் வகையில் கொடுங்கோல் ஆட்சி செய்துவரும் திமுகவின் கொட்டம் அடியோடு அடங்கும் அந்த நாளை ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதயதெய்வம் அம்மா முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகளுக்காக அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு வாதங்களும் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. ஆனால், மத்தியில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அங்கம் வகித்த போது கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் தவறவிட்டு, பதவி சுகத்தை அனுபவிப்பதில் மட்டுமே தங்களது முழு கவனத்தையும் செலுத்திய திமுக, கச்சத்தீவு தாரைவார்ப்பு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, ஈழத்தில் நடந்த இனப்படுகொலை என அனைத்து விவகாரங்களிலும் மாநிலத்தின் உரிமைகளை தாரைவார்த்துவிட்டு, தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் மாநில சுயாட்சி முழக்கத்தை முன்னெடுத்திருப்பது திமுகவினரின் தோல்வி பயத்தையே வெளிப்படுத்துகிறது.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அந்த மனம் சிந்தாமலும், சிதறாமலும் இருந்தால் தான் அதிலிருந்து உருவாகும் சக்தியின் மூலம் நாம் எதையும் சாதிக்க முடியும். அப்படியாகத்தான் இதயதெய்வம் அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஓரணியில் திரண்டு அசைக்க முடியாத சக்தியாக தற்போது உருவெடுத்துள்ளோம்.

ஆனால், அம்மாவின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திடுவோம் என சூளுரைத்தவர்களில் சிலர், இத்தனை காலம் தூக்கத்தில் இருந்துவிட்டு, தங்களின் சுயநலத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலன் தராததால், இன்று அம்மாவின் தொண்டர்களை ஏமாற்றி, அவர்களை துண்டாட நினைப்பதையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் மக்கள் விரோத தீயசக்திகளிடம் விலைபோய் அவர்களோடு இணைய துடிப்பதோடு, சட்டமன்றத்திற்குள்ளேயே தனது ஆதரவாளரை வைத்து புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதையும் தனது அவ்விரு பெரும் தலைவர்களைப் போற்றி வணங்கிடும் கோடான கோடி தொண்டர்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். இத்தகைய சுயநல கூட்டத்திற்கு வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் நமது இயக்கத்தின் வெற்றிக் கணக்கு இனிதே தொடங்கவிருக்கிறது. நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளும், கிளைகள் தோறும் ஆற்றிவரும் களப்பணிகளும் நம்மையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களையும் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு அழைத்துச்செல்வது உறுதி.

"இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு... எதிர்காலம் ஒன்று எல்லோருக்கும் உண்டு" என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, இருளில் மூழ்கித் தவிக்கும் தமிழக மக்களுக்கு வாழ்வின் ஒளியைக் காட்டிடவும், சீர்கெட்டு, சிதைந்து சின்னாபின்னமாக இருக்கும் தமிழகத்தை மீட்டெடுத்து அமைதி, வளம், வளர்ச்சி என்ற சிறந்ததொரு எதிர்காலத்தை தந்திடவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் இதயதெய்வம் அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடவும் சபதமேற்போம். வரும் 24.02.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நடைபெறும் அம்மாவின் 78-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நாம் அனைவரும் சங்கமிப்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.