சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரின் அளவில் 14.74 டி.எம்.சி.யை குறைத்து விட்டது. உச்சநீதிமன்றத்தீர்ப்பின் இந்த அம்சம் மட்டும் மிக ஏமாற்றமளிக்கிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதற்காக கூறப்பட்டுள்ள காரணங்களை ஏற்க முடியாது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பு தான் இறுதியானது என்றும், இதை எதிர்த்து எந்த வகையிலும் மேல்முறையீடு செய்ய இயலாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு அந்த மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
எனவே, உச்சநீதிமன்றம் அளித்துள்ள அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-
நதிகளை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்திற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது நமக்கு பாதகமான விஷயம். இந்த தீர்ப்பை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் தண்ணீர் திறக்க கோரியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. கர்நாடகாவில் எந்த கட்சியின் ஆட்சி இருந்தாலும் தீர்ப்பை மதிக்க வேண்டும்.
காவிரி விஷயத்தில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோர்ட்டு உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்கவில்லை. எனவே நமக்கான உரிமைகளை பெறுவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதிக்க வேண்டும்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த்:-
உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழகத்திற்கு குறைவாக தண்ணீர் கிடைக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். இந்த தீர்ப்பு தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பது தான். எப்படி தேசிய நெடுஞ்சாலைகள் என்பது எல்லா மாநிலங்களுக்கும் சமமாக இணைப்பு சாலைகளாக இருக்கிறதோ, அதேபோல அனைத்து நதிகளையும் எல்லா மாநிலங்களுக்கும் சமமாக இணைக்க வேண்டும், அப்போதுதான் இந்தியா முழுவதும் எங்கும் வறட்சி இல்லாமலும், வெள்ள பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்து சமநிலையாக அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, தமிழக விவசாயிகளையும், பொதுமக்களையும் கடும் அதிர்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கி இருக்கின்றது. காவிரிப் பாசனப்பகுதிகளில் 13 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுப் பயிர்கள் கருகி அழியும் நிலையில் இருக்கும்போது, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பேரிடியாக உள்ளது.
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் வளம் நன்றாக இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறி இருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. பல ஆண்டுகளாகக் காவிரியில் தண்ணீர் இல்லாமல் தமிழகத்தின் நிலத்தடி நீர் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களிலேயே 500 முதல் ஆயிரம் அடி வரை கீழே போய்விட்டது. தற்போது உச்சநீதிமன்றம் காலக்கெடு எதுவும் விதிக்காமல், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது வெறும் கண்துடைப்பு ஆகும். காவிரி நதி எந்த மாநிலத்திற்கும் சொந்தம் இல்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது. தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, காவிரி நீர்ப் பங்கீடு பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்வது குறித்து விவாதிக்க வேண்டும்.
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. தமிழக அரசு நமக்கு கிடைக்க வேண்டிய உரிமையை உடனே பெற்றுத்தரவேண்டும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நீரை பெற்றுத்தருவதில் இரண்டு மாநில அரசுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதனை தமிழக பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தும். தமிழக விவசாயிகளை கர்நாடக காங்கிரஸ் அரசு வஞ்சித்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-
தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளின் உயிரைப்பற்றி கவலைப்படுவதை விட பெங்களூரு உலகத்தரம் வாய்ந்த நகரம் என்று சான்றிதழ் வழங்குவதற்கே நீதிமன்றம் முன்னுரிமை அளித்திருப்பது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்வது உண்மையென்றால் காவிரியில் நமது உரிமையை நிலைநாட்ட அவரைப்போலவே உறுதியோடு இன்றைய முதல்-அமைச்சரும் போராடவேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை எதிர்த்து தமிழகத்தின் குரல் ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டும். அதற்கு உடனடியாக அனைத்து கட்சிகளின் கூட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் கூட்டவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:-
உச்சநீதிமன்றம் தமிழகத்திற்குரிய தண்ணீரின் அளவை 177.25 டி.எம்.சி. ஆக குறைத்திருப்பது தமிழகத்திற்கு பாதகமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கருதுகிறது. இது நியாயமானதல்ல.
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் கணிசமான பகுதி கடலோரமாகவும், உப்புநீர் நிறைந்ததாகவும் உள்ள நிலையில் நிலத்தடி நீரை விவசாயத்திற்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த முடியாது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டுமென்பது உள்ளிட்ட இந்த தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், கர்நாடக மாநில அரசும் தீர்ப்பை அமல்படுத்த முன்வர வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:-
காவிரி நதிநீரை ஆதாரமாகக் கொண்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ள நிலையில், தொடர்ந்து குறைந்துவரும் மழைப்பொழிவு, நிலத்தடி நீர்மட்டம், நிச்சயமற்ற பருவநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், நிலத்தடி நீராதாரத்தைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் தண்ணீரின் அளவை குறைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது தமிழகத்திற்கு தொடர் பாதிப்பை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும், அதன் விளைவுகளையும் பரிசீலிக்க தமிழக அரசு அனைத்துக்கட்சி மற்றும் விவசாயிகள் இயக்கத் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-
உச்ச நீதிமன்றத்தீர்ப்பில் காவிரி நதிநீரை அனுபவிக்கும் எந்த மாநிலமும் தமக்கு தான் நதி நீர் என்று சொந்தம் கொண்டாட முடியாது என்று குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே சமயம் தமிழகத்திற்கு தண்ணீரை குறைத்திருப்பது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:-
காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை போன்ற பயிர்ச் சாகுபடிகள் சரிவர நடக்காமல் பாலைவனமாக அப்பகுதி மாறிடும் நிலையில், தவித்த வாய்க்குத் தாகம் தீர்க்கக் கூடிய அளவில் கூட தண்ணீர் தராதது மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஆளுங்கட்சி, உடனடியாக அனைத்துக் கட்சிகள், சமூக, விவசாய அமைப்பினரைக் கூட்டி, ஒன்றுபட்ட ஒருமித்த குரலில் நமது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்யவேண்டும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-
தேசியச்சொத்து என்ற அடிப்படையில், காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது தான். ஆனால் கர்நாடகாவுக்கு கூடுதலாக தண்ணீர் தரவேண்டும் என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மேலும் நதிகளை தேசியமயமாக்கினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.