நியமனத்துக்கு தடை
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. அதில், நிபுணத்துவ உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படுபவர்கள், சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் கிரிஜா வைத்தியநாதன் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், கிரிஜா வைத்தியநாதனை நிபுணத்துவ உறுப்பினராக நியமித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிஜா வைத்தியநாதன் சார்பில் வக்கீல் சந்தானராமன் ஆஜராகி, சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மருத்துவக்கழிவுகள் மேலாண்மை ஆகிய துறைகளில் 5 ஆண்டுகள், 9 மாதம் கிரிஜா வைத்தியநாதன் பணியாற்றியுள்ளார். இதுதவிர, பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிப்பு வழிகாட்டு குழுவின் தலைவராகவும், கூவம் ஆற்றைச் சுத்தம் செய்யும் கண்காணிப்புக் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். அவருக்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான துறைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உள்ளது என்று வாதிட்டார்.
மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், மனுதாரர் தரப்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் சம்பந்தமான துறையில் கிரிஜா வைத்தியநாதன் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். எனவே, அவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் பதவி நியமனத்துக்குத் தகுதி இல்லாதவர் என்று கருத முடியாது. அதனால், அவரது நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குகிறோம். வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.