தமிழக செய்திகள்

கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவைக்காக 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 20 அடி உயர ராட்சத தூண்கள்

பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் சேவைக்காக போரூரில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 அடி உயர ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பாதையில் வருகிற 2026-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினார்கள்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகரில்போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து ரூ.61 ஆயிரத்து 843 கோடி நிதியில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு வடிவமைக்கப்பட்ட 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர், மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

2026-ல் ரெயில் இயக்க இலக்கு

இந்த வழித்தடங்களில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரெயில் நிலையங்களும், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 48 ரெயில் நிலையங்களும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 50 ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன. இந்த மூன்று வழித்தடங்களிலும் இரண்டாம் கட்ட பணிகளான கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி இடையே வருகிற 2026-ம் ஆண்டு முடிக்கப்பட்டு மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பணிகள் ஒதுக்கீடு பெற்ற கட்டுமான நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் தீவிரத்தை காட்டி வருகின்றனர். குறிப்பாக சுரங்கரெயில் பாதை பணிகள், உயர்மட்ட பாதைகள் அமைப்பது மற்றும் ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

1 கி.மீ., தூரத்திற்கு தூண்கள் தயார்

பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் நசரத்பேட்டை வரை சாலையில் தடுப்புகள் அமைத்து சுரங்கப்பாதைக்கான துளைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல், போரூர்-பூந்தமல்லி இடையேயான 7.9 கிலோ மீட்டர் நீளத்தில் நடக்கும் உயர்மட்ட பாதைக்கு தேவைப்படும் ராட்சத தூண்கள், அதாவது போருர் ராமச்சந்திரா மருத்துவமனை எதிரில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 அடி உயரத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பாதுகாப்பான முறையிலும், தரமாகவும், விரைவாகவும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இன்றி பணிகளை செய்ய அறிவுரைகள் வழங்கியதை தொடர்ந்து பணிகள் வேகம் எடுத்து உள்ளது.

குறிப்பாக போரூர்-அய்யப்பன்தாங்கல் இடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை தடுப்புகள் அமைத்து ராட்சத கிரேன்கள் உதவியுடன் பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் சென்னை புறவழிச்சாலையை கடந்து ராமச்சந்திரா மருத்துவமனை, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பணிமனை உள்பட 9 ரெயில் நிலையங்கள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளும் நடந்து வருகிறது.

பொது போக்குவரத்தை அதிகரிக்க திட்டம்

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரை 9 ரெயில் நிலையங்கள் வருகிறது. இதில் ரெயில் உயர்மட்ட பாதை 7.9 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடம் தான் சென்னையில் முக்கியமான பகுதிகளான மயிலாப்பூர். தியாகராயநகர், வடபழனி, ஐடி பார்க்காக வளர்ந்து வரும் போரூர் மற்றும் புறநகர் பகுதியான பூந்தமல்லி வரை இணைக்கிறது.

அத்துடன் பூந்தமல்லியில் மெட்ரோ ரெயில் பணிமனை ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்துவது ஒரு புறம் இருந்தாலும், மாநகரில் பொது போக்குவரத்தின் பங்கின் சதவீதத்தை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து