சென்னை,
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பும் விதிக்கப்பட்டது. அதன்படி, மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை வைத்து பார்த்தால், 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என்று தெரிகிறது. ஏனென்றால், இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். இதேபோல், மாவட்ட செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது திமுகவில் 70 வயதிற்கு மேற்பட்ட மாவட்ட செயலாளர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,
காஞ்சிபுரம் தெற்கு: சுந்தர் - 72
ராணிப்பேட்டை: ஆர் காந்தி - 80
திருவண்ணாமலை தெற்கு: ஏவா வேலு - 75
விழுப்புரம் வடக்கு: செஞ்சி மஸ்தான் - 71
சேலம் கிழக்கு: எஸ் ஆர் சிவலிங்கம் - 75
ஈரோடு தெற்கு: முத்துசாமி - 77
தஞ்சாவூர் வடக்கு: சாக்கோட்டை அன்பழகன் - 72
புதுக்கோட்டை தெற்கு: ரகுபதி - 76
மதுரை மாநகர்: கோ தளபதி - 70
தேனி தெற்கு: ராமகிருஷ்ணன் - 77
விருதுநகர்: கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் - 77
தூத்துக்குடி தெற்கு: அனிதா ராதாகிருஷ்ணன் - 74
திருநெல்வேலி மேற்கு: ஆவுடையப்பன் - 81