

சென்னை,
தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முதியவர்களை விடுவித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
குறிப்பாக, அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 75-ல் இருந்து 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கிளைச் செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை பதவி வகிப்போருக்கு வயது வரம்பும் விதிக்கப்பட்டது.
அதன்படி, கிளை செயலாளர் பதவிக்கு 45 வயது என்றும், வட்டச் செயலாளர் பதவிக்கு 50 வயது என்றும், மாவட்ட செயலாளர் பதவிக்கு 70 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை வைத்து பார்த்தால், 13 தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் பதவி பறிபோகும் என்று தெரிகிறது. ஏனென்றால், இவர்கள் 13 பேரும் 70 வயதை கடந்தவர்கள் ஆவார்கள். இதேபோல், கட்சியில் எந்த பதவியாக இருந்தாலும், ஒருவர் 2 முறைக்கு மேல் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அடுத்த 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.