கோவை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 10 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், குடிநீர், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு பிற மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய சிலர் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மதுபாட்டில்கள் கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அங்குள்ள ஒர்க்ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் சோதனை செய்தனர். அப்போது அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 32 மதுபாட்டில்கள் மற்றும் 48 மதுபாக்கெட்டுகளை கடத்தி வரப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுனர் உள்பட 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.