வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் சந்துக்கடைகள் அமைத்து மது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று அரும்பாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமரேசன்(வயது 23) என்பவர் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குமரேசனை கைது செய்து, அவரிடம் இருந்து 361 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து எந்த டாஸ்மாக் கடையில், அவர் 361 மது பாட்டில்களை வாங்கினார்? ஒருவருக்கு எப்படி இவ்வளவு மது பாட்டில்களை விற்பனை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.