சென்னை,
தமிழகத்தில், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், அரசியல் சாசனப்படி 5 ஆண்டுகள் பதவி காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வார்டு மறுவரையறை என்பது ஒரு காரணமே அல்ல. தேர்தலை நடத்தாமல் இருக்க செயற்கையாக அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக சிறைக்கு அனுப்பலாம் என்று வாதாடினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் நேற்று பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.