தமிழக செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜர் விசாரணை தள்ளிவைப்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நேற்று ஐகோர்ட்டில் ஆஜராகினர்.

சென்னை,

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர் சிங் ஆகியோர் ஆஜராகினர்.

விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம், வார்டு மறுவரையறை தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்றும், அந்த வழக்கை தி.மு.க. இன்னும் திரும்பப்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், வார்டு மறுவரையறை செய்வது தொடர்பாக ஆணையம் அமைத்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது சட்டமன்ற நடவடிக்கை என்பதால், அரசுத்துறை அதிகாரிகளான ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் எந்த விதத்திலும் உள்ளாட்சி தேர்தலுக்கு பொறுப்பாக மாட்டார்கள் என்றும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு தனது தரப்பு விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 24-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும், அவர்கள் இருவரும் அடுத்தடுத்த விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்