காரைக்குடி,
கடந்த 2016 மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. அதே ஆண்டு அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் நிறைவு பெற்றது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தும் வேலைகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டது. ஆனால் நீதிமன்ற வழக்குகள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் போன்ற காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. தேர்தல் நடத்தப்படாததால், இவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தற்போது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் உள்ளாட்சி நிர்வாகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகளில், ஒவ்வொரு முறை ஆஜராகும் போதும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்து வருகிறது.
இந்தநிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஊரகத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி,
உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டதாகவும், அதனால் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறினார்.