சென்னை,
அண்டை மாநிலமான கேரளாவில் மிக முக்கியமான பண்டிகை ஓணம். ஜாதி, மத வேறுபாடின்று உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதியிலிருந்து தொடங்கி, அடுத்த பத்து நாள்களுமே ஓணம் பண்டிகை நாட்களாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்கு வரும் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பதில் செப்டம்பர் 12-ம் தேதி பணி நாளாகக் கருதப்படும். உள்ளூர் விடுமுறையால் கருவூலம் உள்ளிட்ட பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும். ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்போடு கொண்டாடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.