சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெடுஞ்சாலைகளுக்கான சுங்கவரி வசூலிப்பு முறையில் மாற்றம்செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தம் 2 நாட்களாக நீடிக்கிறது. வேலை நிறுத்தத்தின் பாதிப்புகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கிவிட்ட நிலையில், அதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இதுவரை பேச்சு நடத்தக்கூட அழைக்காததால், வேலை நிறுத்தம் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வேலை நிறுத்தத்தின் பாதிப்புகள் நேற்றில் இருந்தே தெரியத் தொடங்கிவிட்டன. லாரிகள் ஓடாததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சென்னை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சந்தைகளுக்கு கொண்டு வரப்படவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் நடமாட்டமும் தடைபட்டுள்ளது.
முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
லாரிகள் வேலை நிறுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி நிறுவனங்களுக்கு பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடித்தால் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயருவதை தடுக்க முடியாது. இப்படியாக அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலைநிறுத்தம் நீடிப்பதைவிட, உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படுவது தான் சரியானதாகும்.
எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் மத்திய, மாநில அரசுகள் இணைந்து லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாடுமுழுவதும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்கள், மற்றும் காய்கறிகள் வரத்து நின்று போகும். இதனால் பொருள்களின் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படுவதோடு, மேல்தட்டு மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நாடுமுழுவதும் உள்ள லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடியும் அரசிற்கு பல நூறுகோடியும் பொருளாதார இழப்பும், வர்த்தக இழப்பும் ஏற்படும். இந்த நிலை நீடிக்கக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களை அழைத்து முறையான பேச்சு வார்த்தையின் மூலம் இதற்கு ஓர் தீர்வுகாண வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.