ஈரோடு
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.
மணக்கோலத்தில்...
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த பவதாரணி (வயது 25) என்பவர் தனது காதல் கணவருடன் மணக்கோலத்தில் வந்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
நான் கடந்த ஒரு வருடமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சித்தம்பாளையம் அருகே உள்ள பரவள்ளிக்காடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் (32) என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில் இன்று (அதாவது நேற்று) மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். எனது பெற்றோரால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
காதல் ஜோடி
இதேபோல் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் தனது காதல் மனைவியுடன் மாலையும் கழுத்துமாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
நான் பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறேன். அதே நிறுவனத்தில் சீனாபுரம் அருகே உள்ள கள்ளாகுளம் பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவரும் டெய்லராக வேலை பார்த்து வந்தார். ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. எங்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது. நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் நாங்கள் 2 பேரும் இன்று (அதாவது நேற்று) வீட்டை விட்டு வெளியேறி பெருந்துறையில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். எனது மனைவி வீட்டார் மூலம் எங்களுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.