தமிழக செய்திகள்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம்

மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை,

மதுரையில் மிகத் தொன்மையான சைவ மடங்களுள் ஒன்றான மதுரை ஆதீனத்தின் சன்னிதானமாக அருணகிரிநாதர் பதவியேற்றார். சுமார் 46 ஆண்டுகாலம் ஆதீனமாக தொண்டாற்றிய அருணகிரிநாதர் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் சைவ சமய வளர்ச்சிக்கும் பாடுபட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணகிரிநாதருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று இரவு அவர் காலமானார்.

மருத்துவமனையில் இருந்து அவரது உடல் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீன மடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் மாசி வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அருணகிரிநாதர் மறைவுக்குப் பிறகு 293-வது ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 10 நாட்களுக்குப் பிறகு பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.