மதுரை,
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று அதிகாலையில் கோலாகலமாக நடைபெற்றது. தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், அதிகாலை பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா" முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். வைகையில் எழுந்தருளிய கள்ளழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார்.
காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு, பகல் 12 மணிக்கு கள்ளழகர் ராமராயர் மண்டபம் செல்கிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள். வேடம் அணிந்த பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கு எழுந்தருள்கிறார். அங்கு நாளை அதிகாலை ஏகாந்த சேவையும், மதியம் தேனூர் மண்டபத்தில் மண்டுக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளன.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தசாவதாரக் காட்சி, நாளை நள்ளிரவு 12 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய நடைபெற உள்ளது. இதில் பெருமாளின் பத்து அவதாரங்களையும் பக்தர்கள் தரிசிக்கலாம். மறுநாள் காலை மோகினி அவதாரத்தில் வீதி உலா வரும் அழகர், மே 4-ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி, பின்னர் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் விடைபெற்று மீண்டும் அழகர்மலைக்குத் திரும்புவார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால், மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் தின விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் பேருந்துகள் மற்றும் குடிநீர், சுகாதார வசதிகளைத் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் விரிவாக செய்துள்ளது.