மதுரை,
மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒருபோக விவசாயிகள் பாசன சங்கம் சார்பாக, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஒருபோக விவசாயம் செய்வதற்கு போதிய நீர் திறந்துவிட வலியுறுத்தி கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை-சென்னை தேசிய நெஞ்சாலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மேலூர் போலீசார் விவசாய சங்க செயலாளர் முருகன், வழக்கறிஞர்கள் ஸ்டாலின், அமலன், உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் அமலன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதி இளங்கோவன் இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனது உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது;-
விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்வதற்கான தண்ணீர் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை சட்ட விரோதமான போராட்டம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
மேலும் விவசாயிகள் போராட்டத்தின் போது பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்த வித ஆதாரங்களும் வழக்கில் காட்டப்படவில்லை. எனவே விவசாயத்திற்கு தண்ணீர் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்து உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார்.