மதுரை,
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி திருமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் போலீசார் கூடுதல் விழிப்புடன் இருந்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போதைப்பொருள் புழக்கம் அதிகரிக்காமல் தடுக்க முடியும்.
எனவே, தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவும், போதைப்பொருள் குற்றவாளிகளுடன் கைகோத்து செயல்படும் சந்தேகத்துக்குரிய காவல் துறையினரை கண்காணிக்கவும் நேர்மையான காவல் அதிகாரிகள் உள்ளடங்கிய உயர்மட்ட ரகசிய குழு அமைக்க தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.