தமிழக செய்திகள்

மதுரை: அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல தடை

அழகர்கோவில் இரணியன்கோட்டைக்குள் வாகனங்கள் செல்ல மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளரிப்பட்டியை சேர்ந்த பிரபு, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கணாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் ஆகியோர், மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில், மதுரை அழகர்கோவிலின் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தற்போது நடக்கும் கட்டிட பணிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை அழகர்கோவிலில் உள்ள இரணியன் கோட்டை பகுதி 13.43 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதற்கு வெளியே உள்ள அழகாபுரிக்கோட்டை பகுதி 79.35 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது அழகாபுரி கோட்டை பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதி கோவிலில் இருந்து 85 மீட்டர் தூரத்தில் உள்ளது.

இங்கு கட்டிடங்கள் கட்டப்படுவதால் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இதற்கு தடையில்லா சான்றிதழ் தேவையில்லை. சுற்றுச்சூழலுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. கோவிலின் வைப்பு நிதி ரூ.85 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக குறைந்துள்ளது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த தகவல் உண்மை இல்லை. அழகர்கோவில் வங்கி கணக்கில் ரூ.53.08 கோடி வைப்பு நிதி உள்ளது. வணிகநோக்கில் பணிகள் நடக்கவில்லை என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து அழகர்கோவில் வளாகத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் (தடை விதித்து) என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கோவில் கோட்டைகளுக்கு உள்பட்ட பகுதிகளின் புகைப்படங்களை பார்த்தோம். இதில் இரணியன் கோட்டைக்குள் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இது கோவிலின் பாரம்பரிய பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இரணியன் கோட்டை பகுதிக்குள் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது.

ஆனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள், நோயாளிகள், பலவீனமானவர்கள் தரிசனத்துக்கு செல்ல கோவில் நிர்வாகம் உரிய வாகன வசதியை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு, அடுத்த விசாரணையின்போது இங்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல நந்தனார் மண்டபத்திற்கு அருகில் உள்ள அனுமதிக்க முடியாத சில கட்டிடங்களை அகற்ற வேண்டும். அதேபோல கொட்டகைகள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளையும் அகற்றுங்கள்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் ஒப்பந்த அறிவிப்பு குறித்த ஆவணங்களையும், கோவில் கணக்கு வழக்குகளையும், அழகர்கோவில் உரிமைகள் தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பு ஆகியவற்றையும், செலவு செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்