கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம்: வைகோ வரவேற்பு

திமுக ஆட்சியில் மகளிர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று பிப்ரவரி 13-ம் தேதி காலையிலேயே 5,000 ரூபாய் பணத்தை வரவு வைத்திருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையையும், பின்னர் கோடைகால சிறப்பு தொகை என 2,000 ரூபாயும் என சேர்த்து மொத்தம் 5,000 ரூபாயை பெண்களின் கணக்கில் வரவு வைத்திருக்கிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வெளியிட்டு விளக்கமும் தந்து இருக்கிறார்.

திமுக அரசு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் தொடரும்; மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வழங்கப்படக்கூடிய 1,000 ரூபாய் என்பதை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். சொன்னதை செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சொல்லாததையும் செய்து காட்டுவார் என்பதற்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டமே சான்றாக இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மகளிர் நலன் காக்கும் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தாய்க்குலத்தின் பேராதரவு திராவிட மாடல் ஆட்சிக்குப் பெருகிக்கொண்டே போகிறது. இந்நிலையில் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததைப் போல் முதல்வர் வெளியிட்டிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றிய அறிவிப்பை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்று பாராட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.