சிதம்பரம்,
ஆண்டுக்கு 6 முறை
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜமூத்திக்கு, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி மாதங்களில் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதாவது ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும்.
ஆனித்திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
மாசி மாத மகாஅபிஷேகம்
அந்த வகையில் மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை நடராஜரையும், சிவகாம சுந்தரியையும், சிறப்பு அலங்காரத்தில் எடுத்துவந்து, சித்சபை முன்பு உள்ள கனகசபையில் வைத்தனர். அங்கு இரவு 7.30, மணிக்கு தொடங்கி இரவு 11 மணிக்கு மேல் வரை மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதில், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூத்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீ, பன்னீ, சந்தனம் புஷ்பம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு குடம், குடமாக அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகாபிஷேக ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதாகள் செய்தனர்.
மகாருத்ர யாகம்
முன்னதாக நேற்று காலை கிழக்கு கோபுரம் வாசல் அருகே ஸ்ரீசபையில் லட்சார்ச்சனை, யாகசாலையில் கடஸ்தாபனம், மகாருத்ர யாகம் நடந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து, மதியம் மகாருத்ர யாகம், வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாஸினி தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கடயாத்ராதானம், நடந்தது. அதை தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் சன்னதியில் மகாபிஷேகம் தொடங்கி நடந்தது.