தமிழக செய்திகள்

சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணி: ரெயில் சேவைகள் மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சில ரெயில்கள் பிப்ரவரி 03 ஆம் தேதி முதல் ஏப்ரல் 04 ஆம் தேதி வரை தாம்பரம் / சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும்/முடிவடையும். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16866) வருகிற பிப்ரவரி 3 முதல் ஏப்ரல் 05 வரை தாம்பரத்தில் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். இந்த ரெயில் காலை 3.50 மணிக்கு தாம்பரம் வந்துசேரும். மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 16865) வருகிற பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு தஞ்சாவூர் புறப்படும்.

கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 20636) வருகிற பிப்ரவரி 3 முதல் ஏப்ரல் 5 வரை தாம்பரத்தில் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். இந்த ரெயில் காலை 5.30 மணிக்கு தாம்பரம் வந்துசேரும். மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 20636) வருகிற பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு கொல்லம் புறப்படும்.

ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16752) வருகிற பிப்ரவரி 3 முதல் ஏப்ரல் 5 வரை தாம்பரத்தில் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும். இந்த ரெயில் காலை 7.10 மணிக்கு தாம்பரம் வந்துசேரும். மறுமார்க்கத்தில் (வண்டி எண்: 16752) வருகிற பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 6 வரை தாம்பரத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு ராமேசுவரம் புறப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22158) வருகிற பிப்ரவரி 4 முதல் ஏப்ரல் 4 வரை சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்படும்.