சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் உத்தரவின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் குறுக்கு ரோடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்ற நபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கம்மாபுரத்தை சேர்ந்த நாகராஜன் மகன் குண்டுமணி என்கிற ரமேஷ்(வயது 42) என்பதும், சேத்தியாத்தோப்பு நல்லதண்ணீர்குளம் நவநீதகிருஷ்ணன் கோவில், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வலசக்காடு வீரன் கோவில், மேட்டுக்குப்பம் விநாயகர் கோவில்களில் நகை மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.