தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு அத்துமீறி வீடுபுகுந்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த கோவில்பட்டியைச் சேர்ந்த வெற்றிசெல்வன் (வயது 29) என்பவர் மீது நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பிரீத்தா நேற்று, வெற்றிசெல்வன் குற்றவாளி என உறுதி செய்து, அத்துமீறி வீடுபுகுந்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2,500 அபராதமும், பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.2,500 அபராதமும் விதித்து மேற்சொன்ன தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சுதா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.