சென்னை,
கடந்த ஜுலை மாதம் 1ம் தேதி நெய்வேலியில் செயல்படும் என்.எல்.சி. அனல் மின் நிலைய இரண்டாவது சுரங்கத்தில் அதிக திறன் கொண்ட பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை என்.எல்.சி. நிர்வாகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுப்பு தெரிவித்தது.
அதனை தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வந்தது. அந்த வழக்கில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, விபத்துக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது குறித்து ஆய்வு செய்து அடுத்த 6 மாதத்திற்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த விசாரணை குழு என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்து தொடர்பாக அறிக்கை ஒன்றினை இன்று சமர்ப்பித்துள்ளது. அதில், என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் 20 பேர் உயிரிழந்ததற்கு என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர்களில் பணியாற்றுபவர்கள் கொதிக்கலனை கையாள தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களை மட்டுமே கொதிக்கலனை சுத்தம் செய்யவதற்கு பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் கொதிக்கலனை சரிவர கையாள தெரியாத ஊழியர்களை அப்பணியில் ஈடுபடுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. அனல்மின் நிலைய கொதிக்கலனை துய்மைப்படுத்துவதற்கு தனித்த வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.