தமிழக செய்திகள்

சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு போட்டி: காளைகள் முட்டியதில் 19 பேர் காயம்

சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பங்குனி மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளவட்ட மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் மீண்டும் நல்ல மழை பெய்து கண்மாய்கள் நிரம்பவும், விவசாயம் செழிக்க வேண்டியும் சேவுகப்பெருமாள் அய்யனாரை வணங்கி இந்த மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது.

சிங்கம்புணரியின் மையப்பகுதியான சீரணி அரங்கம் பகுதியில் இந்த ஆண்டுக்கான இளவட்ட மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு சொந்தமான தேர்வட சங்கிலி கொண்டு வந்து போடப்பட்டது. தொடர்ந்து மஞ்சுவிரட்டு தொடங்கியது.

பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை கட்டு மாடுகளாக சீரணி அரங்கத்தில் இருந்து பெரிய கடை வீதியில் ஆங்காங்கே அவிழ்த்துவிட்டனர். இதில் காளைகள் கூட்டத்திற்கு மத்தியில் சீறிப்பாய்ந்து சென்றன. பல காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சென்றன. சில காளைகள் இளம் வீரர்களிடம் சிக்கின.

இதில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி அளிக்கப்பட்டது. ஒருவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். மஞ்சுவிரட்டை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர். மழை வேண்டி நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டானது நிறைவடைந்த பின்னர், சிறிது நேரம் மழை பெய்ததால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.