திருவள்ளூர்.
திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் மாவோயிஸ்டுகள் தங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதை அறிந்த போலீசார் நேற்று காலை அவர்களை பிடிக்க போலீஸ் படையுடன் சென்றனர்.
அப்போது புல்லரம்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் இருந்த ஒரு பெண்ணும், ஆணும் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் பிடித்தனர்.
இதனையடுத்து இருவரையும் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் திருவள்ளூரை அடுத்த ஒதப்பையை சேர்ந்த தசரதன் (வயது 32), அவரது மனைவி செண்பகவல்லி என்ற கனிமொழி (28) என்பதும், இருவரும் மாவோயிஸ்டுகள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் ஒதப்பையில் உள்ள தசரதனின் சகோதரர் வெற்றி வீரபாண்டியன் (40) என்பவரது வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து வெற்றி வீரபாண்டியனையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுள்ள செண்பகவல்லி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரபேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்டு பாலன் என்பவரது மகள் ஆவார். மாவோயிஸ்டு இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தசரதன் தனது மனைவியுடன் ஒதப்பையில் உள்ள சகோதரர் வெற்றி வீரபாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் வாகன சோதனையில் 2 பேரையும் பிடித்தனர்.
மேலும் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக வெற்றி வீரபாண்டியனையும் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து முக்கிய ஆவணங்களும், துண்டுபிரசுரங்களும், மடிக்கணினிகளும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
பிடிபட்ட 3 பேரும் கர்நாடக மாநிலத்தில் நவீன துப்பாக்கிகளை இயக்க பயிற்சி பெற்றவர்கள். செண்பகவல்லி கடந்த 2008-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு தர்மபுரி நவீன் என்பவரிடம் ஆயுத பயிற்சி பெற்றவர்.
கடந்த 2008-ம் ஆண்டு கொடைக்கானலில் மாவோயிஸ்டுகள் நடத்திய நாசவேலை தொடர்பாக செண்பகவல்லியை போலீசார் தேடி வந்தனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். கைதான 3 மாவோயிஸ்டுகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தெரிவித்தார்.