சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குகிறது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் போட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகில் இருந்து தெடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ-மாணவிகள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். அதில் பங்கேற்ற அரசு விளையாட்டு விடுதி மாணவிகள் தங்களுடைய முகத்தில் செஸ் பலகை மாதிரியை வரைந்து இருந்தனர். மேலும் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தையும் ஏந்தி சென்றனர். அதேபேல் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த மினி மாரத்தான் ஓட்டம் தலைமை தபால் நிலையம், பஸ் நிலையம், ஏ.எம்.சி. சாலை பூமார்க்கெட், மெயின்ரோடு, வெள்ளை விநாயகர் கோவில், அரசு மருத்துவமனை வழியாக ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நிறைவுபெற்றது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், விளையாட்டு பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.