அருப்புக்கோட்டை
ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை-தாலிக்கு தங்கம் ஆகியவற்றை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
திருமண உதவி
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் சமூக நலத்துறை சார்பில் பெண்களுக்கான திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அருப்புக்கோட்டை, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 96 பேருக்கு ரூ.42 லட்சத்து 92 ஆயிரத்து 448 மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் திருமண நிதி உதவித்தொகை வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
இந்த திட்டத்தில் பிளஸ்-2 படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம், டிகிரி படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரத்துடன் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பல பெண்களுக்கு பெற்றோர் சீர் செய்யப்பட முடியாமல் கவலையடைந்து வந்த நிலையில் அவர்களது வேதனையில் பங்கு கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை வகுத்து பெண்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறார்.
பெண் குழந்தைகள்
பெண் குழந்தைகள் படிக்க வேண்டும், அவர்களின் எதிர்காலம் சரியாக அமைய வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நம்முடைய கஷ்டம் நம்மளோட போகட்டும். வரும் காலங்களில் குழந்தைகளை படிக்க வையுங்கள். அவர்களின் எதிர்காலத்தை அவர்களே அமைத்துக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சாத்தூர் எல்.எல்.ஏ. ரகுராமன், தி.மு.க..முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்கமீது, மாவட்ட பொருளாளர் கே.வி.கே.ஆர். பிரபாகரன், நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஒன்றிய குழு தலைவர் சசிகலா, நகர்மன்ற துணைத்தலைவர் பழனிசாமி, தி.மு.க. நகரச் செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், புலியூரான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.