கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கிய பிளஸ்-1 தேர்வுகள் ஏப்ரல் 5-ந் தேதி நிறைவடைந்து, நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 120 அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் ஓசூர் கல்வி மாவட்டத்தில், 72 பள்ளிகள் உள்பட, 192 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 597 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் தேர்வு எழுதிய 7,375 மாணவர்களும், 9,519 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்கள் 80.87, மாணவிகள் 90.86 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக, 86.12 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி மற்றும், 30 தனியார் பள்ளிகள் உள்பட 31 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.