கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பெண் ஊழியர்கள் பிரசவ விடுப்பு விவகாரம் - தமிழக அரசின் விதிகளில் திருத்தம்

பிரசவ விடுப்பு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அடிப்படை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை,

அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ விடுப்பு வழங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் அடிப்படை விதிகளில் மாற்றம் கொண்டு வந்து தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு 2 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவருக்கு பிரசவ விடுப்பாக 365 நாட்கள் வரை அளிக்கலாம். பெண் ஊழியர் ஒருவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவருக்கு அடுத்த பிரசவத்துக்கு 365 நாட்கள் வரை விடுப்பு அளிக்கலாம்.

ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண் ஊழியர் மீண்டும் பிரசவ விடுப்பு கேட்கும் பட்சத்தில் அவருக்கு சம்பளத்துடன் கூடிய 12 வாரங்கள் விடுப்பு அளிக்கலாம். இந்த விடுப்பை அவர் பிரசவத்துக்கு முன்போ அல்லது பின்போ எடுத்து கொள்ள அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read:தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா? - எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்